தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைகிறது குடகில் பயங்கர நிலச்சரிவு


தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைகிறது குடகில் பயங்கர நிலச்சரிவு
x
தினத்தந்தி 6 Aug 2020 8:31 PM GMT (Updated: 6 Aug 2020 8:31 PM GMT)

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழையால் குடகில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய அர்ச்சகர் உள்பட 7 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கிடையே 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

தென்மேற்குபருவமழை தீவிரம்

தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. போக, போக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை வெளுத்து வாங்கி வந்தது. அதன்பிறகு தலைநகர் பெங்களூரு, மைசூரு, குடகு ஆகிய பகுதிகளில் பருவமழை தீவிரமடைய தொடங்கியது. தற்போது ஆகஸ்டு மாதம் தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது.

மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக குடகு, மைசூரு, சிவமொக்கா, ஹாசன், சிக்கமகளூரு, தட்சிண கன்னடா ஆகிய தென்கர்நாடகா பகுதிகளிலும், பெலகாவி, பல்லாரி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் ருத்ரதாண்டவமாட தொடங்கி உள்ளது.

காவிரியில்காட்டாற்று வெள்ளம்

கர்நாடகத்தின் சுவிட்சர்லாந்து என்றழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் கனமழையால், குடகு மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக பாகமண்டலா, தலைக்காவிரி பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமம் கடல்போல காட்சி அளிக்கிறது.

தலைக்காவிரியில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், காவிரி ஆற்றங்கரையொட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றங்கரையையொட்டி இருக்கும், கொண்டங்கேரி, உய்யா, கூடுகத்தே, கரடிகோடு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. கரடிகோடு கிராமத்தை சேர்ந்த 12 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பள்ளி கட்டிடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, போர்வை, படுக்கை உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். குஷால்நகர் சாய் லே-அவுட் பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும் குடகு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் இருளில் மூழ்கி உள்ளன.

7 பேரின் கதி என்ன?

பாகமண்டலா அருகே தலைக்காவிரி பகுதியில் உள்ள பிரம்மகிரி மலையில் நேற்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்த மலை அடிவாரத்தில் இருந்த 2 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அதில் ஒரு வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் மற்றொரு வீட்டில் அர்ச்சகர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தற்போது மண்சரிந்து விழுந்துள்ளதால், அர்ச்சகர் உள்பட அவருடைய குடும்பத்தினர் 7 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்தனரா? என்பதும் தெரியவில்லை.

இதுபற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள், மண்ணுக்குள் புதைந்த வீட்டில் யாரும் உள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். பிரம்மகிரி மலையில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு, வீடுகள் மீது சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் அனீஸ் கண்மணி ஜாயும் அங்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அங்கு மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் நிலை உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மழையால் மடிகேரி-பாகமண்டலா, மடிகேரி-நாபொக்லு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

சார்மடி மலைப்பாதையில் மண்சரிவு

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை விடாமல் பெய்து வருகிறது. சிருங்கேரி காந்தி மைதானம், கப்பே சங்கர கோவில் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மூடிகெரே தாலுகாவில் விவசாயி ஒருவரின் 6 ஏக்கர் வாழைத்தோட்டம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆற்று படுகையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.அதே மாவட்டம் கொப்பா தாலுகாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த பகுதியில் பெரிய மரம் முறிந்து விழுந்ததால், சிருங்கேரி-கொப்பா-சிக்கமகளூரு சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி தகவல் அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த மரத்தை துண்டு துண்டுகளாக வெட்டி அகற்றினர். அதன் பிறகு அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

சார்மடி மலைப்பாதையில் 4-வது, 5-வது கொண்டை ஊசி வளைவுகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மண்சரிவு அகற்றப்பட்டது. மேலும் ஹாசன் மாவட்டத்தில் ஹேமாவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

50 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியை தாண்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அந்த அணையில் இருந்து சுமார் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆற்றின் படுகையில் வசிக்கும் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நஞ்சன்கூடு அருகே கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையால் மைசூரு மாவட்டம் உன்சூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள கோவிலின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் 16 கால் மண்டபத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. மேதார்கேரி, குருபகிரி, சரஸ்வதி காலனி லே-அவுட்டுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

13 வீடுகள் சேதம்

கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில் தான் மழை வெளுத்து வாங்குகிறது. தட்சிண கன்னடாவில் மங்களூரு, பெல்தங்கடி, புத்தூர், பண்ட்வால் உள்ளிட்ட தாலுகாவில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. பண்ட்வால் தாலுகாவில் மழைக்கு 13 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் குமாரதாரா, பல்குனி, சுப்பிரமணியா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்கள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

3 மாவட்டங்களில் ஓடைகள், சிற்றாறுகளில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் அரபிக்கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. கடலின் அருகே யாரும் செல்லக்கூடாது என்பதற்காக கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சசிகலா ஜோலே ஆய்வு

தென்கர்நாடக மாவட்டங்களை போல வடகர்நாடக மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்க தொடங்கி உள்ளது. அங்கு பெலகாவி, ராய்ச்சூர், விஜயாப்புரா, பல்லாரி, தார்வார், ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மராட்டிய மாநிலம் கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெலகாவி மாவட்டம் கானாப்புரா, நிப்பானி, சிக்கோடி தாலுகாக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு ஏராளமான கிராமங்களில் மழைநீர் புகுந்தது. சிக்கோடியில் மழை வெள்ள பாதிப்புகளை மந்திரி சசிகலா ஜோலே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் நாசமாகின. ஆபத்தான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஹாவேரி மாவட்டம் ராட்டிஹள்ளி தாலுகா மடகமசூர் கிராமத்தில் ஏரி உடைந்து, தண்ணீர் ஊருக்குள் தண்ணீர் புகுந்தன. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மொத்தத்தில் கர்நாடகத்தில் மழை வெளுத்து வாங்குவதால், கடந்த ஆண்டு ஏற்பட்டதை போல் இந்த மீண்டும் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது

‘ரெட் அலர்ட்’

கர்நாடகத்தில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிலும், குறிப்பாக குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய 7 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் எனவும், அங்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு வருகிற 10-ந்தேதி வரை ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மாற்ற 5 மாவட்டங்களுக்கு 48 மணி நேரத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழையும் சேர்ந்துள்ளதால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

Next Story