குன்னம் அருகே அணையில் தவறி விழுந்து டாக்டர், கல்லூரி மாணவர் சாவு
குன்னம் அருகே கொட்டரை அணையில் தவறி விழுந்து டாக்டர், கல்லூரி மாணவர் இறந்தனர். நண்பர்களுடன் அணையை சுற்றிப்பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது.
குன்னம்,
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ரஞ்சித்(வயது 25). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக, அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று டாக்டர் ரஞ்சித், அதே கிராமத்தை சேர்ந்த கஜேந்திரனின் மகனும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவருமான பவித்திரன்(17), அவரது அண்ணன் பவீன்குமார்(19), ராஜாசிதம்பரத்தின் மகன் கார்த்திக் (25), கலைச்செல்வனின் மகன் செந்தில்வேலன் (26) மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 12 பேர், கொட்டரை கிராமம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் நேற்று காலை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர். அங்கு கிரிக்கெட் போட்டி முடிந்தபின்னர், அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கொட்டரை கிராமத்தில் வந்தபோது கடந்த 2014-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு முழுமை பெறாதநிலையில் உள்ள கொட்டரை அணையை சுற்றிப்பார்க்க வந்தனர். அணையை சுற்றி பார்த்த பின்னர் கடைசியாக நீர் வழிந்து வெளியேறும் பகுதிக்கு ரஞ்சித், பவித்திரன், செந்தில்வேலன், கார்த்திக் ஆகிய 4 பேரும் வந்தனர். மீதமுள்ளவர்கள் அருகில் உள்ள சமவெளி தரையில் அமர்ந்து கொண்டனர்.
ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரும் நீர் வழிந்தோடும் மிகப்பெரிய தடுப்புச்சுவரின் மேலே ஏறி பார்த்தனர். அப்போது தடுப்புச்சுவற்றில் மற்றொரு பக்கம் மிக நீண்ட சாய்வு தளத்தில் நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு சென்று இறங்கி உள்ளனர். சாய்வு தளத்தில் பாசிப்பிடித்து இருந்ததால், கால்தவறி அதில் வழுக்கிச்சென்று தேங்கியுள்ள தண்ணீரில் ரஞ்சித் மற்றும் பவித்திரன் ஆகியோர் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற கார்த்திக் மற்றும் செந்தில்வேலன் முயன்றனர்.
அப்போது அவர்களும் தண்ணீரில் வழுக்கி விழுந்தனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அடுத்த பகுதியில் துணி துவைத்துக்கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்து தங்கள் சேலையை வீசியுள்ளனர். அந்த சேலையை பிடித்து கார்த்திக் மற்றும் செந்தில்வேலன் இருவரும் மேலே வந்தனர். ரஞ்சித், பவித்திரன் ஆகியோர் நீரில் மூழ்கி நண்பர்கள் கண்முன்னே இறந்தனர். சமவெளி தரையில் அமர்ந்திருந்தவர்கள், இது பற்றி பெற்றோருக்கும், தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் சுகந்தி, செந்தில்குமார், மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், கண்ணுசாமி மற்றும் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ், அரியலூர் தீயணைப்பு அலுவலர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் 10 அடி ஆழமுள்ள நீரில் இறங்கி தேடி முதலில் பவித்திரன் உடலை மீட்டனர். சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின்னர் டாக்டர் ரஞ்சித் உடலை மீட்டனர்.
இதையடுத்து ரஞ்சித் மற்றும் பவித்திரன் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் அப்பகுதியில் திரண்டனர். அணையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி டாக்டர், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story