ஒரே இடத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி, மாணவர் தற்கொலை: காதல் பிரச்சினையா? போலீசார் விசாரணை


ஒரே இடத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி, மாணவர் தற்கொலை: காதல் பிரச்சினையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2020 6:39 AM IST (Updated: 7 Aug 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

ஒரே இடத்தில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி, மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், காதல் பிரச்சினையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி அடுத்த கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் கவிதா(வயது 20). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சென்னி மலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் இவர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கவிதா அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் செம்பாக்குறிச்சி அடுத்த ஈரியூரில் உள்ள அருஞ்சோலை அம்மன் கோவில் எதிரே உள்ள கொட்டகையில் கவிதாவும், வாலிபர் ஒருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் கவிதாவுடன் இறந்து கிடந்த வாலிபர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்த பாட்டப்பன் மகன் பாஸ்குமார்(20) என்பதும், இவர் கவிதாவுடன் படித்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் இவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. காதல் பிரச்சினை காரணமாக இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story