தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்ட 4-ம் கட்ட பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்


தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்ட 4-ம் கட்ட பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 7 Aug 2020 6:57 AM IST (Updated: 7 Aug 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்ட 4-ம் கட்ட பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் இன்பதுரை எம்.எல்.ஏ. தகவல்.

நெல்லை,

மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று தண்ணீரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடும் வகையில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 19-2-2019 அன்று ரூ.261 கோடி மதிப்பில் 3-ம் கட்ட பணிகளுக்கான அரசாணை வெளியிட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து 90 சதவீதம் முடிவடைந்து உள்ளன. 3-ம் கட்ட பணிகள் மூலம் வெள்ளநீர் நம்பியாற்றில் போய் சேரும் இடம் வரையிலான பணிகள் தற்போது முழுமையடைந்து உள்ளது.

இந்த பணிகளை இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 தொகுதிகள் முழுமையாக பயன்பெறுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 23 ஆயிரத்து 40 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். தற்போது திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 4-ம் கட்ட பணிகளுக்காக தமிழக அரசு ரூ.160 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. நெல்லைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளநீர் கால்வாயின் 4-ம் கட்ட பணிகளை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். தற்போது 3-ம் கட்ட பணிகள் முழுமையாக முடிந்து விட்ட நிலையில், 4-ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவுபெறும். மே மாதத்துக்குள் பணிகள் முழுமை பெற்று தாமிரபரணி தண்ணீர் ராதாபுரம் தொகுதிக்கு வந்தடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஞானசேகரன், ராதாபுரம் சொசைட்டி தலைவர் முருகேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story