வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 90 ஆயிரம் முககவசங்கள் வருகை


வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 90 ஆயிரம் முககவசங்கள் வருகை
x

வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வந்துள்ளன. முககவசம் திருப்பூரில் தர பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பலர் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்தனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி கடந்த மாதம் 27-ந் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வந்துள்ளன.

தர பரிசோதனைக்கு பின்னரே...

இதுகுறித்து வேலூர் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் 14 லட்சத்து 18 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடும்பஅட்டைகளில் பெயர் உள்ள 6 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு 2 முகவசம் வீதம் 12 லட்சத்து 6 ஆயிரம் முககவசம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 12 லட்சத்து 7 ஆயிரம் முககவசம் ஆர்டர் செய்யப்பட்டது.

தற்போது முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வேலூருக்கு வந்துள்ளன. ஒரு பண்டல்களில் 5 ஆயிரம் வீதம் 18 பண்டல்களில் 90 ஆயிரம் முககவசங்கள் உள்ளன. ஒவ்வொரு பண்டல்களிலும் உள்ள 5 முககவசங்கள் தர பரிசோதனைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பரிசோதனையில் முககவசங்கள் தரமாக உள்ளது என்று தெரிய வந்ததும் அவை பொதுமக்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள முககவசங்கள் விரைவில் வரவழைக்கப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story