செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2020 3:15 AM GMT (Updated: 7 Aug 2020 2:38 AM GMT)

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று இரவு தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கல்லூரி மாணவர்கள் தேர்வு கட்டணம் ஏற்கனவே கட்டி விட்டனர். அந்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். தேர்வு நடக்காவிட்டால் விடைத்தாள்கள் மட்டுமே மிச்சமாகும்.

மாணவர்களுக்கு சதவீத அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும் பணியை ஆசிரியர்கள் வழக்கம்போல் செய்து வருகிறார்கள். எனவே மாணவர்கள் செலுத்திய தேர்வு கட்டணத்தை திருப்பிதர சாத்தியக்கூறு இல்லை. இருந்தபோதிலும் அந்த கோரிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு கடந்த 5-ந்தேதி வரை 1,39,339 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர். பதிவு செய்ய இன்னும் காலஅவகாசம் உள்ளது. கடந்த ஆண்டு 1,33,116 பேர் பதிவு செய்திருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் பதிவு அதிகம். இதில் 1,10,571 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். கொரோனா தொற்று இருக்கக்கூடிய காரணத்தினால் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பதிவு ஆன்லைன் மூலம் நடக்கிறது.

இதன்படி இதுவரை 3,16,795 பேர் பதிவு செய்து உள்ளனர். இவர்களில் 2,17,494 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். லேட்டரல் என்ட்ரிக்கான பணிகள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.


Next Story