படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு


படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Aug 2020 1:35 AM IST (Updated: 8 Aug 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடை மும்பை ஐகோர்ட்டு உத்தரவால் நீக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய அரசு கொரோனா பிரச்சினை காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சினிமா படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள தடைவிதித்தது. மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து 70 வயது நடிகர் பிரமோத் பாண்டே, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, மூத்த நடிகர்களின் நலனுக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோர்ட்டில் மாநில அரசு கூறியது.

எனினும் கோர்ட்டு அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இதுகுறித்து கோர்ட்டு மற்ற தொழில்கள் செய்ய எல்லா வயதினரும் அனுமதிக்கப்பட்டுள்ள போது, நடிப்பதற்கு மட்டும் வயதானவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது. அரசின் முடிவு பாரபட்சமாக இருப்பதாக கூறியிருந்தது.

தடை நீக்கம்

இந்தநிலையில் மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் எஸ்.கே.காதாவாலா, சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள தடைவிதித்து இருந்த மாநில அரசின் 2 அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த அரசாணைகள் கடந்த மே 30 மற்றும் ஜூன் 23-ந் தேதி பிறப்பிக்கப்பட்டவை ஆகும். மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இனிமேல் அவர்களும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story