புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு


புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு
x
தினத்தந்தி 8 Aug 2020 4:13 AM IST (Updated: 8 Aug 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,712 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு நேற்று விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டு இருக்கிறது.

சென்னை,

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உயர்வை தொட்டது. கடந்த ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தின் இறுதியில் இருந்து தற்போது வரை பவுனுக்கு ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் பெருமளவில் உயர்வு இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 5-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.976 அதிகரித்தது. அதற்கு மறுநாள் (நேற்று முன்தினம்) பவுனுக்கு ரூ.400 உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்றும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.

ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.42-ம், பவுனுக்கு ரூ.336-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,712 உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் 83 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.83 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி விற்பனை ஆனது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.11 ஆயிரத்து 100 உயர்ந்துள்ளது.

ரூ.50 ஆயிரத்தையும் தொடும்?

தங்கம், வெள்ளி மீது முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்து வருவதன் காரணமாகவே விலை தாறுமாறாக உயருகிறது என்றும், இதேநிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை தொடும் என்றும் தங்கநகை வியாபாரிகள் உறுதியாக கூறுகின்றனர்.

Next Story