சீர்காழியில், மர்மமான முறையில் இறந்த பெண் உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு
சீர்காழியில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு மதினா நகரில் வசிப்பவர் ராஜ்குமார்(வயது 40). இவர், சீர்காழியில் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த கேசவன் மகள் சுவர்ணலட்சுமி(33) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுவர்ணலட்சுமி வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். தகவலறிந்த ராஜ்குமார் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேசவன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. மகாராணி விசாரனை நடத்துகிறார்.
இந்த நிலையில் 2 நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்தும், சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story