பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று: அரியலூரில் 51 பேர் பாதிப்பு


பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று: அரியலூரில் 51 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2020 6:11 AM IST (Updated: 8 Aug 2020 6:11 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூரில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 69 பேரும், அரியலூரில் 51 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வைரசின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கும், அரியலூரில் 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், வி.களத்தூர் கால்நடை மருத்துவ ஆய்வாளரான பெண் டாக்டருக்கும், விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 6 பேருக்கும், வி.களத்தூரில் கொரோனாவினால் உயிரிழந்த முதியவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும், ரஷ்ய நாட்டில் இருந்து திரும்பி வந்த அந்தனூரை சேர்ந்த டாக்டருக்கும், எசனையை சேர்ந்த கால்நடை டாக்டருக்கும், அவரது மனைவிக்கும், பெரம்பலூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கும், வயலப்பாடியில் பெண் மற்றும் அவரது 2 மகன்களுக்கும், துறைமங்கலம், கூடலூரில் தாய்-மகனுக்கும் உள்பட மொத்தம் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 69 பேரில், 46 பேர் ஆண்கள் ஆவார்கள். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 641 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 195 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரியலூர்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், அரியலூர் திருமானூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 11 பேருக்கும், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,205 ஆக உயர்ந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 931 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 379 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story