“எந்தெந்த மொழிகளை கற்பிக்கும் பள்ளிகளுக்கு மானியம்?” - தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கை குறித்து மதுரை ஐகோர்ட்டு கேள்வி


“எந்தெந்த மொழிகளை கற்பிக்கும் பள்ளிகளுக்கு மானியம்?” - தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கை குறித்து மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 8 Aug 2020 10:59 AM IST (Updated: 8 Aug 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கை குறித்து மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி, எந்தெந்த மொழிகளை கற்பிக்கும் பள்ளிகளுக்கு மானியம் என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

தமிழகத்தில் அரசு உதவி பெறும், உதவி பெறாத தனியார் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் நிரப்புவது குறித்து சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

தற்போது இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:-

அரசு உதவி பெறும், உதவி பெறாத, சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் கல்வி மற்றும் நிர்வாக விஷயங்கள் மட்டும் இல்லாமல் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய தமிழகத்தில் ஒருங்கிணைந்த சட்டம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்-1973 மற்றும் விதிகள் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த சட்டமும் இல்லை. பிரச்சினைகள் ஏற்படும்போது அவ்வப்போது அரசு உத்தரவுகள், நிர்வாக உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்படுகின்றன. சில நேரங்களில் பிரச்சினைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இதை தவிர்க்க தனியார் பள்ளிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா? என்பதை இந்த கோர்ட்டு அறிய விரும்புகிறது.

சமீபத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதையடுத்து தமிழகம் இருமொழி கல்விக்கொள்கையை மட்டுமே தொடர்ந்து கடைபிடிக்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் கொள்கையாக இருமொழி கல்விக்கொள்கை இருக்குமானால், தமிழ் மற்றும் வேறு ஏதாவது ஒரு மொழியா? அல்லது தமிழும், ஆங்கிலமும் மட்டும் தானா? அப்படியானால் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது இருமொழியையும் சரிசமமாக கற்பிக்கும் பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு மானியம் அளிப்பதில் மாற்று கருத்து ஏற்படுமா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் அல்லது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு 2 வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் அவகாசம் கேட்காமல் கோர்ட்டின் கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story