கூடலூரில் வெள்ள சேதம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல் - நிவாரண பொருட்களை வழங்கினர்
கூடலூர் பகுதியில் வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமங்கள் உள்பட ஏராளமான பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கூடலூர் புத்தூர் வயல், அத்திப்பாளி, பாடந்தொரை, 2-ம் மைல் உள்ளிட்ட அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூடலூர் பகுதியில் உள்ள புத்தூர்வயல், அத்திப்பாளி முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேற்று மாலை 3 மணிக்கு சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மேலும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் மழை வெள்ளத்தால் என்ன சேதங்கள், பாதிப்புகள் ஏற்பட்டதோ அவை அனைத்தும் உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 250 பேருக்கு அரிசி, மளிகை, கம்பளி, அடுப்பு, துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், முன்னாள் அமைச்சர் மில்லர், நகர செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் பத்மநாபன் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story