சூறாவளி காற்றுடன் பலத்த மழை: நீலகிரி மாவட்டத்தில் கிராமங்கள் இருளில் மூழ்கின
சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. ஊட்டி-கூடலூர் சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் மின்சார வினியோகம் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பல கிராமங்கள் இருளில் மூழ்கின. நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக ஊட்டி அருகே குருத்துக்குளி கிராமத்தில் ஒரு மரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதை அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மின்வாளால் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். மார்லிமந்து அணை அருகே கோழிப்பண்ணை சாலையின் குறுக்கே 2 ராட்சத மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. அவைகள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் வரவழைக்கப்பட்டு அகற்றப்பட்டது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை பின்பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதில் அங்கு நின்ற குதிரை படுகாயம் அடைந்தது. அந்த குதிரைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஊட்டி -இத்தலார் சாலை உள்பட பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அவை, பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அந்த சாலையில் 2 இடங்களில் அபாயகரமான பகுதியில், வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
எமரால்டு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தவளைமலை பகுதியில் மரங்கள், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே ஊட்டியில் இருந்து கூடலூ ருக்கு செல்லும் வாகனங்கள் தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி, மசினகுடி வழியாக கூடலூருக்கு திருப்பி விடப்பட்டன. தலைகுந்தாவில் போலீசார் சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து பைக்காரா வழியாக செல்ல தடை விதித்தனர். கூடலூரில் இருந்து செல்லும் வாகனங் கள் சில்வர்கிளவுட் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பாதுகாப்பு கருதி கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேசிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து முதுமலை வழியாக கூடலூருக்கு வரும் உயர் அழுத்த மின் வழித்தட கோபுரம் ஒன்று முழுமையாக சேதமடைந்தது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடந்த 3 நாட்களாக மின்சார வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மரப்பாலம், மைக்கா மவுண்ட், கோழிக்கோடு சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்தது. கூடலூர் கோல்டன் அவென்யு, நாடுகாணி, தேவாலா உள்பட பல இடங்களில் வெள்ளத்தால் பாலங்கள் சேதம் அடைந்தன. கூடலூர் துப்புகுட்டிபேட்டை வி.வி.என். நகரில் லாரி ஒன்று ஆற்று வாய்க்கால் குறுக்கே இருந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் தாங்காமல் திடீரென்று பாலம் உடைந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின்பக்க டயர்கள் ஆற்று வாய்க்காலில் சிக்கியது. பல மணி நேர முயற்சிக்கு பிறகு லாரி மீட்கப்பட்டது.கூடலூர் அருகே புளியம்பாறையில் இருந்து அட்டிக்கொல்லி செல்லும் சாலையில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மீட்கப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் மழையால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் சேதம் அடைந்தது. கூடலூர் மங்குழி பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்று சேதமடைந்து விழும் நிலையில் உள்ளதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கூடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை மழையின் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர்பவானி, எமரால்டு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து அதிக மழை பொழிவு பதிவாகி வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
ஊட்டி- 56.3, நடுவட்டம்- 220, கிளன்மார்கன்- 192, குந்தா-21, அவலாஞ்சி- 346, எமரால்டு-90, அப்பர்பவானி- 262, கோடநாடு- 28, கூடலூர்- 349, தேவாலா-360, அப்பர்கூடலூர்-330, ஓவேலி-250, செருமுள்ளி-320, பாடான்தொரை-247, சேரங்கோடு-235 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 13 செ.மீ. ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் ஒரே நாளில் 36 சென்டி மீட்டர் மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக அவலாஞ்சி, கூடலூரில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது.
Related Tags :
Next Story