ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல் 2 குழந்தைகளை கடத்திய ஆசாமி கைது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
2 குழந்தைகளை கடத்தி பெற்றோரிடம் ரூ.20 லட்சம் பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
மும்பை,
நாந்தெட் மாவட்டம் போனி கிராமத்தை சேர்ந்த 2 குழந்தைகளை சம்பவத்தன்று மர்மநபர் ஒருவர் கடத்தி சென்றார். பின்னர் அக்குழந்தைகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் உயிருடன் வேண்டுமெனில் தனக்கு ரூ.20 லட்சம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சம்பவம் குறித்து லோகா போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில், விகாஸ் ஹட்கர் என்ற ஆசாமி தான் குழந்தையை கடத்தினார் என்பது தெரியவந்தது. மேலும் அவர் நிலாரோடு பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சுட்டு பிடித்தனர்
உடனடியாக போலீஸ் குழுவினர் அங்கு சென்று அவர் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆபத்து வராமல் அவரை பிடிக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதற்கிடையே தான் பதுங்கி இருக்கும் பகுதியை போலீசார் சுற்றிவளைத்து விட்டதை அறிந்த விகாஸ் ஹட்கர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனை கண்ட போலீசார் அவர் தப்பி செல்லாமல் இருக்க காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த விகாஸ் ஹட்கர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து மடக்கி பிடித்த போலீசார், அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மேலும் அவர் கடத்திய 2 குழந்தைகளையும் மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இதற்கிடையே சிகிச்சை பெற்று வரும் விகாஸ் ஹட்கரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story