சுஷாந்திடம் பண மோசடி குறித்து விசாரணை நடிகை ரியா மீதான அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது
நடிகர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்தது தொடர்பாக நடிகை ரியாவிடம் மீண்டும் நாளை விசாரணை நடத்த இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
மும்பை,
பிரபல 34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்தின் தந்தை கொடுத்தபுகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி (வயது 28) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசு பரிந்துரையின் பேரில் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
8 மணி நேரம் விசாரணை
இந்த நிலையில் சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு உள்ளது என்று அவரது தந்தை அளித்த தகவலின் அடிப்படையாக கொண்டு நடிகை ரியா உள்ளிட்டவர்களுக்கு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்பேரில் சுஷாந்தின் ஆடிட்டரிடம் சமீபத்தில் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ரியா ஆஜரானார். அவருடன் அவரது தம்பி சோவிக்கும் ஆஜராகி இருந்தார்.
நடிகை ரியாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரது தம்பி சோவிக்கின் வங்கி கணக்குக்கு சிறிதளவு பணம் மாற்றப்பட்டது உண்மை தான் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வருமானம், முதலீடு, தொழில் போன்றவை குறித்தும் கேள்வி கேட்டனர். நடிகை ரியா ரூ.14 லட்சம் வருமானத்துக்கு வரி கட்டி இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக அதிகாரிகள் கருதினர்.
மீண்டும் நாளை ஆஜராக உத்தரவு
மேலும் மும்பை கார் பகுதியில் நடிகை ரியாவுக்கு உள்ள சொத்து, அதை வாங்கியதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதும் குறித்தும் கேள்விகளை கேட்டனர். இந்த நிலையில் ரியாவின் வருமானம் மற்றும் செலவினம், முதலீடு இடையே வித்தியாசம் இருப்பதாலும், மேலும் தகவல்களை திரட்ட வேண்டியது இருப்பதாலும் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) ஆஜராக ரியாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர் மீண்டும் ஆஜராக உள்ளார்.
இதற்கு மத்தியில் நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பீகார் போலீசார் செய்த வழக்குப்பதிவின் அடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை பீகார் போலீசார் சி.பி.ஐ. அதிகாரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. போலீசாரின் பிடி நடிகை ரியா மீது இறுகி இருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story