அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. முதல்-மந்திரிக்கு எடியூரப்பா கடிதம்


அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. முதல்-மந்திரிக்கு எடியூரப்பா கடிதம்
x
தினத்தந்தி 9 Aug 2020 4:21 AM IST (Updated: 9 Aug 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரும்படி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலை கட்ட கடந்த ஆண்டு(2019) சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு ஒரு அறக்கட்டளை அமைத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 40 கிலோ வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து கோவில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அயோத்திக்கு செல்லும் கர்நாடக பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

2 ஏக்கர் நிலம்

அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கு வரும் நாட்களில் கர்நாடக பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இதனால் அவர்கள் அங்கு தங்க ஒரு விடுதியை கட்ட முடிவு செய்து உள்ளோம். விடுதி கட்டுவதற்காக அயோத்தியில் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர கேட்டு கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜையை சிறப்பாக நடத்தியதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story