கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் 3 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மைசூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
கடல் மட்டத்தில் 696.12 மீட்டர் கொள்ளளவு கொண்ட கபினி அணை கடந்த சில தினங்களுக்கு முன்பே நிரம்பி விட்டது. இதனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகளவு தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக கபிலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளம் வடிகிறது
இதனால் கபிலா ஆற்றங்கரையோரத்தில் உள்ள எச்.டி.கோட்டை, நஞ்சன்கூடு, டி.நரசிப்புரா ஆகிய 3 தாலுகாக்களிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் அங்கிருந்த மக்கள், வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அங்கிருந்த விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி, பயிர்கள் நாசமாகின. கபிலா ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் கோவில்கள் மற்றும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கபிலா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் சென்றதால், ஏராளமான கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று குறைக்கப்பட்டது. அதாவது, நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 76 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அது நேற்று காலை 10 மணி அளவில் வினாடிக்கு 63 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு மதியம் 12 மணி அளவில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதனால் கபிலா ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளது. மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து வருகிறது.
கே.ஆர்.எஸ். அணை
இதேபோல, 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 120 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 94 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், கே.ஆர்.எஸ். அணை இன்னும் சில நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை வரை வினாடிக்கு 76 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை தண்ணீர் திறப்பு வினாடிக்கு 74,559 கனஅடியாக குறைக்கப்பட்டது.
குடகில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. காவிரி ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வினாடிக்கு 1 லட்சம் கனஅடி
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. அது, நேற்று வினாடிக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 559 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
வெள்ளத்தில் மிதக்கின்றன
இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள ரங்கனதிட்டு வனச்சரணாலயத்தில் தண்ணீர் புகுந்தது. மேலும் மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்தாலும், தடையை மீறி ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள். காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் 3-வது நாளாக நேற்றும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அந்த மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து, பயிர்களை நாசப்படுத்தி உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த 3 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story