போலீசார் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை


போலீசார் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 10 Aug 2020 3:39 AM IST (Updated: 10 Aug 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி போலீசார் நேற்று அணிவகுப்பு ஒத்திகையை தொடங்கினர்.

புதுச்சேரி, 

கொரோனாவால் நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திலும் சுதந்திர தினவிழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்த போதிலும் அதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

குறிப்பாக அணிவகுப்பு நிகழ்ச்சியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் அணிவகுப்பு இடம் பெற வேண்டாம் என்றும் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணிவகுப்பு ஒத்திகை

புதுவை மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் சுதந்திரதின விழா அணிவகுப்பில் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் என 48 அணிகள் இடம் பெறும். ஆனால் இந்த முறை காவல்துறையினரின் 7 பிரிவுகளைச் சேர்ந்த அணிகள் மட்டும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

விழாவிற்கான ஏற்பாடுகள் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு அணிவகுப்புக்கான ஒத்திகை நேற்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையில் காவல்துறையினர் இந்த அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர். அணிவகுப்பின் போது முகக்கவசம், கையுறை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அறிவுரைகள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் அதனை பின்பற்றி அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர். 

Next Story