மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை:நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை:நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 10 Aug 2020 7:02 AM IST (Updated: 10 Aug 2020 7:02 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 3.80 அடி உயர்ந்துள்ளது. 89 அடியாக இருந்த நீர்மட்டம் 92.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 647 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 805 கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.83 அடியாக உயர்ந்துள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 528 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கொடுமுடியாறு அணை நீர்மட்டமும் 42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 21 கனஅடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 36.10 அடி உயரம் கொண்ட செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 40 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேறுகிறது. இதுதவிர 84 அடி உயரம் கொண்ட கடையம் ராமநதி அணை நிரம்பி விட்டது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 74 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 484 கனஅடியாக உள்ளது. இதனால் அணை விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.

72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது. அணைக்கு 59 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 125 அடியாக உள்ளது. நீர்வரத்து 110 கன அடியாக உள்ளது. இந்த அணை முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் நீர்வெளியேற்றம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர கிராமங்களான பண்பொழி, கரிசல்குடியிருப்பு, வடகரை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அச்சன்புதூர் போலீசார் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பாபநாசம் -10, சேர்வலாறு -10, மணிமுத்தாறு -14, அம்பை -9, சேரன்மாதேவி -3, நாங்குநேரி -11, பாளையங்கோட்டை -2, நெல்லை -1, ராதாபுரம் -13, கடனாநதி -15, ராமநதி -5, குண்டாறு -37, அடவிநயினார்- 14, ஆய்க்குடி -3, தென்காசி -5, செங்கோட்டை -19, சங்கரன்கோவில் -3, சிவகிரி -7.

குற்றாலத்தில்...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. எனினும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன.



Next Story