வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உள்பட 9 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:-
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் நக்கீரன் (வயது 71). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் தாழயாத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி முத்துலட்சுமி (75) கடந்த மாதம் 29-ந் தேதி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றும் நேற்று பலனின்றி இறந்து போனார்.
இதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் கடைக்கால் பஜார்தெருவை சேர்ந்த ஸ்ரீராமலு (74) கடந்த 6-ந் தேதியும், அரக்கோணம் அருணாச்சலம் தெருவை சேர்ந்த சகாதேவன் (76) கடந்த மாதம் 29-ந் தேதியும், வாலாஜா புதுரெட்டிக்காரன்தெருவை சேர்ந்த கஜேந்திரன் (64) கடந்த மாதம் 26-ந் தேதியும், வாலாஜா பரந்தாங்கல் பெரியதெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (70) கடந்த 13-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று உயிரிழந்தனர்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்ற பரணிகுமார் (42). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், இவரது தாயாருக்கும் கடந்த மாதம் 27-ந் தேதி நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் இருவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சேர்த்தனர். இதில் இவரது தாயார் குணமடைந்து வீடு திரும்பினார். ரமேஷ் என்ற பரணிகுமார் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
ராணிப்பேட்டை புலித்தெருவை சேர்ந்தவர் அடகு வியாபாரி கஜேந்திரன். கொரோனா தொற்று காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனாவால் இறந்த சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி உடல் சின்னவரிக்கம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story