கணவன்-மனைவி இடையே பிரச்சினை வந்தால் மவுனம் மட்டுமே மருந்து போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டால் மவுனம் மட்டுமே நல்ல மருந்தாக இருக்கும் என்று போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேசினார்.
அரக்கோணம்,
அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப நல மைய திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமை தாங்கினார். அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் முன்னிலை வகித்தார். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனை குடும்ப நல மையத்தை திறந்து வைக்க அழைத்தபோது அவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமியை அழைத்து மையத்தை நீங்கள் திறந்து வையுங்கள் என்று கூறினார். அதனை தொடர்ந்து மையத்தை சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி திறந்து வைத்தார்.
விழாவில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேசியதாவது:-
பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூலமாக தீர்வு ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது. குடும்ப நல மையம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை, மாமியார்-மருமகள் இடையே பிரச்சினை, மருமகள்-நாத்தனார் இடையே பிரச்சினை ஆகியவைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும்.
கணவன்- மனைவி பிரச்சினை விவாகரத்து வரை செல்லாமல் சுமூகமாக தீர்த்து வைக்கப்படும். கணவன், மாமியார், நாத்தனார் மீது புகார் அளிக்கும் பெண்கள் மற்றும் வழக்கு சம்பந்தபட்டவர்களை அழைத்து இந்த மையத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மனோதத்துவம் மூலம் கவுன்சிலிங் அளிக்கப்படும்.
விளக்கி கூறப்படும்
கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்படும்போது அதனால் பாதிக்கப்படுவது யார்? இதனால் எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும் என்பதை நன்றாக புரியும்வண்ணம் விளக்கி கூறப்படும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்லாமல் இருக்க யாராவது ஒருவர் மவுனமாக இருந்தால் அந்த பிரச்சினைக்கு அன்றே தீர்வு ஏற்பட்டு விடும். இதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
நீயா,? நானா? ஒரு கை பார்த்து விடலாம் என்ற தொணியில் பேசும்போது அந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்று விவாகரத்தில் போய் முடிந்து விடுகிறது. நீங்கள் விவாகரத்து பெற்ற பின்னர் உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறிப் போய்விடுகிறது. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
ஆகவே கணவன், மனைவி, மாமியார், நாத்தனார் ஆகியோர் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு விட்டு கொடுத்து போய் வாழ கற்று கொள்ள வேண்டும். விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப குடும்பத்தில் ஒவ்வொருவரும் வாழ கற்று கொள்ள வேண்டும். இந்த மையம் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தர தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் பிரச்சினைகளை வீட்டிலே சுமூகமாக முடித்து கொள்ள வேண்டும். அவ்வாறு முடியாதபட்சத்தில் இந்த மையம் மூலமாக எப்போதும் உங்களுக்காக தீர்வு ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார், அனைத்து மகளிர் நிலைய போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் நன்றி கூறினார்.
கோலம்
பின்னர் டவுன் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள கோப்புகளை போலீஸ் சூப்பிரெண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story