அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு


அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2020 6:06 AM IST (Updated: 12 Aug 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, 

அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக பிற வகுப்புகளுக்கான (2 முதல் எஸ்.எஸ்.எல்.சி.) மாணவர் சேர்க்கையும் வருகிற 17-ந்தேதி முதல் நடைபெறும்.

அதேபோல், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி முதல் நடைபெறும்.

பாடப்புத்தகங்கள்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உரிய பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றி வழங்கப்படும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை செய்திட இணையதளத்தின் மூலம் பெற்றோர் விண்ணப்பம் செய்திட மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள், ஒரு நாள் கூட பள்ளிக்கு வராதவர்கள் 4 ஆயிரத்து 359 பேர் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 248 பேரை தவிர 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ-மாணவிகளின் நலன் கருதி அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பள்ளிகள் திறப்பு எப்போது?

கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை. பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகளை தெரிந்த பிறகும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபிறகும் தான் பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று அனைத்து துறைக்கும் முதல்-அமைச்சர் ஆலோசனை வழங்கி இருக்கிறார். பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவுகளை மேற்கொள்வார். அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story