பேரம்பாக்கம் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது; குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டார்கள் சேதம்
பேரம்பாக்கம் துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது; குறைந்த மின் அழுத்தத்தால் மின் மோட்டார்கள் சேதம் விவசாயிகள் அவதி.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கு இருந்து பேரம்பாக்கம், களாம்பாக்கம், நரசிங்கபுரம், கூவம், குமாரஞ்சேரி, சின்னமண்டலி, பாகசாலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று எரிந்து பழுதடைந்தது.
இதனால் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் சீரான முறையில் மின்சார வினியோகம் செய்ய முடியாமல் அடிக்கடி மின் இணைப்பை துண்டித்து ஒவ்வொரு பகுதிக்கும் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கி வருகின்றனர். அவ்வாறாக வரும் மின்சாரமானது சீராக இல்லாமல் குறைந்த மின் அழுத்தத்தில் வருவதால் விவசாயிகளின் விளை நிலங்களில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் சேதமானது.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.வி. ரமணா துணை மின் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்கு இருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் பேரம்பாக்கத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைத்து தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story