நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் இளம்பெண் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் இளம்பெண் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 12 Aug 2020 7:28 AM IST (Updated: 12 Aug 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் இளம்பெண் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். டாக்டர்கள் உள்பட புதிதாக 382 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,  

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 136 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. அதில் பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், ஆசிரியர் காலனியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், அரசு ஊழியர்கள் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் பணியாற்றும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியில் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மேலக்கரை, பேட்டை செல்வவிநாயகர் கோவில் தெரு, கே.டி.சி.நகர், சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

6,801 ஆக அதிகரிப்பு

பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்த 28 பேர், பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 3 பேர், நாங்குநேரி பகுதியை சேர்ந்த 2 பேர், சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த 8 பேர், களக்காடு பகுதியை சேர்ந்த 8 பேர், மானூர் பகுதியை சேர்ந்த 10 பேர், ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 பேர், வள்ளியூர் பகுதியை சேர்ந்த 13 பேர், அம்பை பகுதியை சேர்ந்த 4 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்கள் நெல்லை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 801 ஆக அதிகரித்தது. இவர்களில் 4 ஆயிரத்து 896 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,815 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

4 பேர் சாவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர், வக்கீல், விவசாயி மற்றும் 68 வயது முதியவர் என 4 பேர் நேற்று ஒரே நாளில் இறந்தனர். இந்த மாவட்டத்தில் இதுவரை 90 பேர் இறந்துள்ளனர்.

சென்னையில் இருந்து பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டுக்கு வந்த 5 பேருக்கு கங்கைகொண்டான் சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று உறுதியானதால், துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 3 பேர் உள்பட 136 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 382 ஆக அதிகரித்தது. இதில் 2 ஆயிரத்து 26 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,302 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வாசுதேவநல்லூரை சேர்ந்த 61 வயதுடைய ஓய்வுபெற்ற வேளாண்மைத்துறை ஊழியர் கொரோனா தொற்று ஏற்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். வாசுதேவநல்லூர் அருகே உள்ள அருளாட்சியை சேர்ந்த 52 வயதுடைய பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுவரை 54 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடியில் 3 பெண்கள் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 469 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 7 ஆயிரத்து 718 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,671 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த 40 வயது பெண், அம்மன்புரத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி, தூத்துக்குடி சிவந்தாகுளத்தை சேர்ந்த 33 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக நேற்று இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் இளம்பெண் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 382 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story