தவளக்குப்பத்தில் போலீசாரை கண்டித்து மினி லாரி உரிமையாளர்கள் போராட்டம்
தவளக்குப்பத்தில் போலீசாரை கண்டித்து மினி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகூர்,
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியை அடுத்த மதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா. மினி லாரி டிரைவர். நேற்று முன்தினம் மினி லாரியில் கடலூரில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் பாரம் ஏற்றிக்கொண்டு சென்றார்.
புதுவை தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் வந்தபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வேனை நிறுத்துமாறு சைகை காட்டினர். இதனால் பதற்றமடைந்த பிரசன்னா திடீர் பிரேக் பிடித்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் நின்ற வாகனம் மீது மோதியதுடன் சாலையின் நடுவே தடுப்புக்கட்டையில் மினி லாரி மோதியது.
போராட்டம்
இதையடுத்து விபத்துக்குள்ளான மினி லாரி முன்பு நின்று புதுவை மற்றும் தமிழ்நாடு மினி லாரி ஓட்டுநர் சங்க தலைவர் சத்யராஜ் தலைமையில் நேற்று போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மினி லாரி சங்க நிர்வாகிகள் பிரேம், முனியன், பாலாஜி மற்றும் மினி லாரி டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் சங்க தலைவர் சத்யராஜ் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வந்த நிலையிலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவால் தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல போலீஸ் நிலைய போலீசார் சரக்கு வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். இதனால் ஓட்டுனர்களின் வருமானம் மேலும் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி புதுச்சேரி கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story