சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமானநிலையத்தில் வாகன சோதனை மும்முரமாக நடத்தப்படுகிறது.
சென்னை,
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
சுதந்திர தின விழா
இதன் காரணமாக பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றுகிறார்கள். சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
கண்காணிப்பு தீவிரம்
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது.
சுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னையில் பாதுகாப்பு
சென்னை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர தின விழாவை யொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகன சோதனை நடத்தப்படுவதோடு, விடுதிகளில் சோதனை போடப்படுகிறது. சந்தேகப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
விமானநிலையம்
சுதந்திர தின விழா நடைபெறும் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விமானநிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மும்முரமாக வாகன சோதனை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மோப்ப நாய் சோதனை
சுதந்திர தின விழாவை யொட்டி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலும், எழும்பூர் ரெயில் நிலையத்திலும் நேற்று மோப்ப நாய்கள் மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் ரெயில்வே பாதுகாப்புப்படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர்.
சுதந்திர தினம் வரையில் இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும், அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருவதாகவும் ரெயில்வே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சேத்துப்பட்டு மற்றும் பேசின் பாலம் ரெயில்வே பணிமனைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story