நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சட்டவிரோதம் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சட்டவிரோதம் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Aug 2020 8:43 PM GMT (Updated: 13 Aug 2020 8:43 PM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது சட்டவிரோதமானது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி 50-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டவிரோதம்

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை மும்பையில் தான் நடைபெற்றது. ஆனால் இந்த வழக்கில் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அதை பீகார் அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தது. அதை உடனடியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. இந்த வழக்கு தற்போது தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சி.பி.ஐ. வசம் தான் உள்ளது.

நாங்கள் சி.பி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மும்பை போலீசார் ஏற்கனவே தங்கள் பணியை செய்து வருகின்றனர். இதில் சி.பி.ஐ. என்ன செய்ய போகிறார்கள்?

சுஷாந்தின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் சற்று அமைதிகாக்க வேண்டும். சுஷாந்துக்கு நீதி கிடைக்க மும்பை போலீசாரை விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story