கோவில்பட்டியில் ரேஷன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


கோவில்பட்டியில் ரேஷன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2020 6:49 AM IST (Updated: 14 Aug 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரேஷன் கடைகளில் இலவச முககவசம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி, 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கோவில்பட்டி வ.உ.சி. நகர் ரேஷன் கடையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச முககவசம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச முககவசங்களை வழங்கி தொடங்கி வைத்தார். ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முககவசங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது.

பின்னர் கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டியில் கடந்த 5-ந்தேதி கொலை செய்யப்பட்ட கோடீசுவரனின் குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் கோடீசுவரனின் குடும்பத்தினருக்கு பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டி தரப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

இறப்பு விகிதம் குறைவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அரசு முககவசங்களை வழங்கி உள்ளது. தற்போது பொதுமக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசங்கள் வழங்கப்படுகிறது. தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லும்போது கூட, பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 3 இடங்களில் உள்ளன. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

சித்த மருந்துகள்

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டாலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருந்துகளும் வழங்கி குணப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் ஆணையாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு அருகே தெற்கு வண்டானம், கே.குமாரபுரம் ஆகிய கிராமங்களில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அந்த 2 கிராமங்களிலும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வழங்க இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தெற்கு வண்டானத்தில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் குழாயை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், குடிநீர் வடிகால் வாரிய கோட்ட பொறியாளர் செந்தூர் பாண்டியன், யூனியன் ஆணையாளர் சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story