வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி கமிஷனர், என்ஜினீயர் உள்பட 149 பேருக்கு கொரோனா
வேலூர் மாநகராட்சி கமிஷனர், என்ஜினீயர் உள்பட 149 பேர் நேற்று ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
வேலூர்,
வேலூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு கடந்தாண்டு வேலூர் மாநகராட்சிக்கு விருது வழங்கியது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக உள்ளதாக தமிழக அரசு சார்பில் சுதந்திர தினவிழாவில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறுவதற்காக மாநகராட்சி சார்பில் கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன் ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்க இருந்தனர்.
சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் அனைவரும் சளிமாதிரி பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன் ஆகியோருக்கு 2 நாட்களுக்கு முன்பு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது. அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவில் 2 பேருக்கும் தொற்று உறுதியானது நேற்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
8 ஆயிரத்தை நெருங்கியது
வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 15 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேலூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 9 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் தவிர கடை வியாபாரிகள், தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தியவர் என, மாநகராட்சி பகுதியில் 69 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 149 பேர் ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக 100-க்கு கீழ் தொற்று உறுதியான நிலையில் நேற்று 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story