குலசேகரன்பட்டினம் அருகே, மண் அள்ள எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
குலசேகரன்பட்டினம் அருகே மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் அருகே மாதவன்குறிச்சி பஞ்சாயத்து அமராபுரம், கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகளானது செம்மண் நிறைந்த தேரிப்பகுதி ஆகும். இங்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள செம்மண் குன்றுகள் இயற்கையாகவே குடியிருப்பு பகுதிகளுக்கு அரணாக உள்ளது. மேலும் கடல்நீர் நிலத்தடியில் உட்புகுவதையும் தடுக்கிறது.
இந்த நிலையில் கூடல் நகரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்குள்ள தேரிப்பகுதியில் உள்ள செம்மண்ணை சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் அள்ளி லாரிகளில் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
இந்த நிலையில் கூடல் நகர் செம்மண் தேரிப்பகுதியில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மண் அள்ள வந்தனர். அங்கு மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து தலைவர் சேர்மத்துரை தலைமையில், பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாயத்து துணை தலைவர் கருப்பசாமி, வார்டு உறுப்பினர் ஜெயகமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story