வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது


வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது
x
தினத்தந்தி 14 Aug 2020 11:02 PM GMT (Updated: 14 Aug 2020 11:02 PM GMT)

கொரோனா பரவல் எதிரொலியாக வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் ஆடி திருவிழா எளிமையாக நடந்தது.

அரியாங்குப்பம், 

புதுவை அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-வது வெள்ளிக்கிழமையன்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது.

எளிய முறையில் திருவிழா

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று செங்கழுநீரம்மன் தேர் திருவிழா எளிய முறையில் நடத்தப்பட்டது. இதையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன், மகாதீபாராதனை காட்டப்பட்டு, கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் வலம் வந்தார். தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் அம்மனை தரிசித்தனர். கோவில் கொடி மர பகுதியில் நின்று உள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

முன்னதாக பக்தர்களின் விவரம், முகவரி சேகரிக்கப்பட்டது. உடல்வெப்ப பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சமூக இடைவெளி பின்பற்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர். அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story