சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி தி.மு.க.பிரமுகரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரியபாளையம் அருகே சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி தி.மு.க.பிரமுகரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே, கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், கன்னிகாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமியின் கணவருமான முரளி ஆக்கிரமிப்பு செய்ததாக கிராம பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் சென்று தட்டிக்கேட்டதற்கு ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் சிலர் பொதுமக்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கிராம பொதுமக்கள் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து, தி.மு.க. பிரமுகரை கண்டிக்கும் விதமாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் திரண்டு வந்து செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். மேலும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்தனர். அதன் பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story