திசையன்விளை அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் பரபரப்பு


திசையன்விளை அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Aug 2020 12:40 AM GMT (Updated: 15 Aug 2020 12:40 AM GMT)

திசையன்விளை அருகே பெட்டைகுளத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையோரத்தில் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் லாரிகளில் 100-க்கு மேற்பட்ட மூட்டைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றனர்.

திசையன்விளை, 

திசையன்விளை அருகே பெட்டைகுளத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையோரத்தில் காட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் லாரிகளில் 100-க்கு மேற்பட்ட மூட்டைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றனர். அங்கு மலைபோன்று குவிந்து கிடந்த மூட்டைகளில் இருந்து, மருத்துவமனைகளில் பயன்படுத்திய ஊசிகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், துணிகள் போன்றவை சிதறி கிடந்தன.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அனைத்து பகுதிளிலும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மர்மநபர்கள் சாலையோரமாக ஆபத்தான முறையில் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இந்த மருத்துவ கழிவுகளை கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் ஏற்றி வந்து கொட்டிச் சென்றனரா? அல்லது நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து ஏற்றி வந்து கொட்டி சென்றனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாங்குனேரி அருகே உள்ள பொத்தையடியில், ஆஸ்பத்திரி கழிவுகளை தரம் பிரித்து சுத்தப்படுத்தி மறுசுழற்சிக்காக விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தினர், தென்மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகளை வாங்கி வந்து கொட்டியதும், இதற்கு அந்த நிலத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கியதும் தெரிய வந்தது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாலையில் அந்த மருத்துவ கழிவுகளை மீண்டும் 2 லாரிகளில் ஏற்றி பொத்தையடிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story