சுதந்திர தின விழா: பாளையங்கோட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை


சுதந்திர தின விழா: பாளையங்கோட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 15 Aug 2020 12:43 AM GMT (Updated: 15 Aug 2020 12:43 AM GMT)

சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

நெல்லை, 

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 8.50 மணிக்கு கலெக்டர் ஷில்பா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்றுவ.உ.சி. மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முன்னிலையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை புறநகரில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வழிபாட்டு தலங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.

தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்

சுதந்திர தின விழாவையொட்டி, ராணுவ ஹெலிகாப்டர் மூலமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று வ.உ.சி. மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றபோது ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது.

இதேபோல் நெல்லை மாநகரில் முழு ஊரடங்கு நாட்களிலும் ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து நோட்டமிட்டவாறு செல்கிறது.

Next Story