மக்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அரசை குற்றம் சாட்டுகிறார் மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு
‘மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது’ என்பதற்காக மு.க.ஸ்டாலின் அரசை குற்றம்சாட்டுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கலெக்டர்கள் திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), சிவன்அருள் (திருப்பத்தூர்), கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் திருகுண அய்யப்பத்துரை வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் அந்தோணிசாமி ஜான்பீட்டர், ரவிக்குமார், சிறப்புப்பணி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு 6,459 பயனாளிகளுக்கு ரூ.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முடிவில் கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் ஜெயம் நன்றி கூறினார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிரிமினல் வழக்கு
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவுத்துறையில் ஒரு சிறப்பான திட்டமான பொதுமக்கள் தாங்கள் வாழும் கிராமத்திலேயே ரேஷன் பொருட்கள் பெறும் வகையில் அம்மா நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்க அரசாணை பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட உள்ளன. மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த கடைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலூர் மண்டலத்தில் 109 கடைகள் தொடங்கப்படும்.
அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. சில சங்கங்களில் உரங்கள் இருப்பு வைக்க இடவசதி இருக்காது. அந்த சங்கங்களுக்கு தேவையான உரங்கள் குடோனில் உள்ளன. இதன் காரணமாக இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் அதிகளவு உற்பத்தியாகி அறுவடை நடைபெற்றுள்ளது.
கூட்டுறவுத்துறையில் யார் முறைகேடு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கூட்டுறவு சங்கங்களின் சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தவறு செய்தால் கூட்டுறவு சங்க தலைவர், நிர்வாகக்குழுவினர், உயர் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ஊழல், முறைகேடுகள் குறித்து 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். எனவே போலியாக யாரும் கடன் கொடுக்க முடியாது.
நானும் ரவுடிதான்....
குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் தலா 2 முககவசங்கள் கட்டாயம் வழங்கப்படும். விலையில்லா பொருட்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்கியது போன்று முக கவசம் வழங்கப்படும். கொரோனா காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சினிமா காமெடி நடிகர் வடிவேல் படத்தில் நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்... என்று கூறுவது போன்று மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர் அரசை குற்றம் சாட்டி வருகிறார்.
அரசின் செயல்பாடுகளை மக்கள் எவ்வித குறைகளும் கூறவில்லை. கொரோனா காலத்திலும் கடன் வழங்கி உள்ளோம். இதனை எதிர்க்கட்சியினர் பாராட்டாமல், குற்றம் சாட்டி வருகிறார்கள். எதிர்க்கட்சியினர் வழக்கமே குற்றம் சாட்டுவதுதான். நடப்பாண்டில் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.லோகநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஆவின்தலைவர் வேலழகன், மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் வி.ராமு, மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் சுமைதாங்கி சி.ஏழுமலை, அறங்காவல் குழுத்தலைவர் ஜெய்பிரகாஷ், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் ஜனனீ பி.சதீஷ்குமார், எஸ்.குமார், சங்கதலைவர்கள் ஜி.கே.முரளிகுமார், ஏ.ஜி.பாண்டியன், வி.ராஜகுமார், துணை பதிவாளர்கள் முனிராஜ், முரளிகண்ணன், சுரேஷ்குப்தா, கமலக்கண்ணன், வசந்தலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story