மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 11 ஆயிரத்து 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.
மராட்டியத்தில் இதுவரை 5 லட்சத்து 95 ஆயிரத்து 865 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 123 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 1 லட்சத்து 58 ஆயிரத்து 395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 70 ஆக உள்ளது.
20 ஆயிரத்தை தாண்டியது
மாநிலம் முழுவதும் 31 லட்சத்து 62 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 18.84 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மாநிலத்தில் மேலும் 288 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை மராட்டியத்தில் 20 ஆயிரத்து 37 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்டதில் 3.36 சதவீதம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.
தற்போது மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 53 ஆயிரத்து 897 பேர் வீடுகளிலும், 38 ஆயிரத்து 203 பேர் அரசு மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கோலாப்பூர், சாங்கிலி, நாசிக், ஜல்காவ் பகுதிகளில் நோய் தொற்று முன்பைவிட வேகமாக பரவி வருகிறது. நேற்று கோலாப்பூர் புறநகரில் 295 பேருக்கும், கோலாப்பூர் மாநகராட்சியில் 223 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல சாங்கிலி புறநகரில் 174 பேருக்கும், சாங்கிலி மாநகராட்சியில் 148 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story