தூக்கில் தொங்க விட்ட பயங்கரம்: புதுவையில் மெக்கானிக் அடித்துக் கொலை மனைவி, வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை

புதுவை முதலியார்பேட்டையில் மெக்கானிக்கை அடித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டனர். இதுதொடர்பாக மனைவி மற்றும் வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி,
மயிலாடுதுறையை சேர்ந்தவர் தனபாலன். இவரது மகன் கோபிநாத் (வயது 32). மெக்கானிக். மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். அவர் புதுவை முதலியார்பேட்டை சுதானாநகர் ராஜாஜி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி கவுசல்யா (25). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் கோபிநாத்தின் உறவினர் மகன் கார்த்திக்(26) என்பவரும் தங்கி இருந்தார்.
நேற்று பிற்பகலில் கோபிநாத்தின் வீட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. அப்போது அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் விஜயகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு திடுக்கிட்டு வெளியே ஓடிவந்தார்.
அடித்துக் கொலை
உடனடியாக இது குறித்து அவர் முதலியார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் வீரபத் திரசாமி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். தூக்கில் தொங்கிய கோபிநாத்தின் உடலை கீழே இறக்கி பார்த்ததில் அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இதன்பின் பிரேத பரிசோதனைக்காக உடலை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோபிநாத்தின் மனைவி கவுசல்யா, குழந்தை, அவரது உறவினர் கார்த்திக் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகி விட்டது தெரியவந்தது. கோபிநாத்தை அடித்து கொலை செய்து விட்டு அதனை மறைக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாட உடலை தூக்கில் தொங்க விட்டு இருப்பது தெரிய வந்தது.
தகாத உறவு?
அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் கோபிநாத் தகராறு செய்து வந்துள்ளார். இதுபோல் நேற்றும் தகராறு செய்து இருக்கலாம் என்றும் அப்போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதவிர கவுசல்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில் அது தொடர்பான பிரச்சினையில் கோபிநாத்தை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு விட்டு இருவரும் தப்பிச் சென்று இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தவளக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் கவுசல்யா, கார்த்திக் ஆகிய 2 பேரும் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து கோபிநாத் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story