ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அனுமதியின்றி கூடிய 15 பேர் மீது வழக்கு


ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அனுமதியின்றி கூடிய 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Aug 2020 7:16 AM IST (Updated: 17 Aug 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அனுமதியின்றி கூடிய 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர், 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி கொண்டாடுவது வழக்கம். அதே போன்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ராஜீவ் அமைதி ஜோதியை ஆந்திரா, கர்நாடகா வழியாக டெல்லிக்கு எடுத்துச்சென்று சோனியாகாந்தியிடம் ராஜீவ்காந்தி பிறந்த நாளான 20-ந்தேதி ஒப்படைத்து வந்தனர்.

15 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராஜீவ்காந்தி அமைதி ஜோதியை எடுத்துச்செல்ல கர்நாடகம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு ஒன்று கூடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அதில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து அவர்கள் அமைதி ஜோதியை எடுத்து செல்வதற்கான அனுமதி கடிதம் வைத்திருந்ததும், அதில் 3 பேருக்கு மட்டுமே அனுமதி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story