கனமழை: வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன சாலைகள், பாலங்கள் மூழ்கின-போக்குவரத்து துண்டிப்பு


கனமழை: வடகர்நாடகத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன சாலைகள், பாலங்கள் மூழ்கின-போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2020 4:00 AM IST (Updated: 18 Aug 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

வடகர்நாடகத்தில் இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

பாகல்கோட்டை,

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் மட்டும் கனமழை பெய்தது. பெங்களூரு உள்பட மற்ற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களிலும், பாகல்கோட்டை, விஜயாப்புரா, கதக், பல்லாரி, ராய்ச்சூர், யாதகிரி, பெலகாவி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளிலும் கனமழை பெய்தது.

அதே நேரம் வடகர்நாடகத்தையொட்டி உள்ள மராட்டிய மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் அந்த மாநிலத்தின் சத்தாரா மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கொய்னா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணப்புரா பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்து உள்ள பசவசாகர் அணை, விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தி தாலுகாவில் உள்ள அலமட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 7 லட்சத்து 56 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாகல்கோட்டை, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மராட்டியத்திலும், வடகர்நாடக பகுதிகளிலும் மழை சற்று ஓய்ந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மராட்டியத்திலும், வடகர்நாடகத்திலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் மீண்டும் கிருஷ்ணா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகாவில் உள்ள 25 கிராமங்களும், பாதாமி தாலுகாவில் உள்ள 34 கிராமங்களையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. இதன்காரணமாக கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதாமி அருகே கோவனகொப்பாவில் இருந்து கதக் மாவட்டத்தை இணைக்கும் ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் 2 மாவட்டங்களுக்கும் இடையே போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுபோல முதோல் தாலுகா மச்சகனூர் கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையையொட்டி ஒலேபசவேஸ்வரா கோவில் உள்ளது. தற்போது கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த கோவிலை ஆற்று வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளத்தால் ஜமகண்டி-மீரஜ் சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல பெலகாவி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மல்லபிரபா அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணையில் இருந்து தண்ணீர் மல்லபிரபா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மல்லபிரபா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக மல்லபிரபா ஆற்றங்கரையையொட்டி வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் சவதத்தி தாலுகா நவிலே தீர்த்த அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் நவிலே ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதுபோல சிக்கோடி, நிப்பானி, அதானி, காக்வாட் ஆகிய தாலுகாக்களில் உள்ள பல கிராமங்கள் மல்லபிரபா, கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் தான் அமைந்து உள்ளன. இதனால் அந்த கிராமங்களையும் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக அந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் மரிஹாலா கிராமம் வழியாக செல்லும் பெலகாவி- கோவா சாலையும் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி கிராமத்தில் மல்லபிரபா ஆற்றையொட்டியுள்ள நரசிம்மசாமி கோவிலையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது.

இதுபோல கதக் மாவட்டத்திலும் கதக், நரகுந்து, ரோண், சிரகட்டி தாலுகாக்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. கதக்கில் இருந்து ராய்ச்சூர், பாகல்கோட்டைக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நரகுந்து தாலுகா லக்குமபுரா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால், அந்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி மாநில நெடுஞ்சாலையில் டிராக்டர்களை இருப்பிடமாக மாற்றி அதிலேயே வசித்து வருகின்றனர். டிராக்டர்களிலேயே உணவு சமைத்தும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழையால் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கு உதவ அதிகாரிகள் முன்வருவது இல்லை என்றும் கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

பசவசாகர், அலமட்டி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகாவில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. லிங்கசுகூர் தாலுகா மேதரஹட்டே கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஆடுகளை மேய்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணா ஆற்றை கடந்து மறுகரைக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆடு மேய்க்க சென்றவர்கள் ஆற்றின் மறுகரையில் 50 ஆடுகளுடன் தவித்து வருகின்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

யாதகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பசவசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சகாப்புரா தாலுகா கல்லூரா கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ராய்ச்சூர்-தேவதுர்கா சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 45 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதவிர வடகர்நாடகத்தில் உள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. தொடர் கனமழை காரணமாக வடகர்நாடக மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story