திருக்கழுக்குன்றம் அருகே பெண் அடித்துக்கொலை தாய், மகனுக்கு வலைவீச்சு


திருக்கழுக்குன்றம் அருகே பெண் அடித்துக்கொலை தாய், மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Aug 2020 6:43 AM IST (Updated: 20 Aug 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொல்லமேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காசி. இவரது மனைவி அமிர்தம் (வயது 58). காசியின் தம்பி ரங்கநாதன். வீட்டுமனை தொடர்பாக காசிக்கும், ரங்கநாதனுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அமிர்தம் தனது ஆடு, மாடுகளை ரங்கநாதனின் வயலில் மேய்ச்சலுக்கு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரங்கநாதனின் மனைவி சந்திரா (48), அமிர்தம் மற்றும் அவரது கணவர் காசியிடம் சென்று, “எங்கள் வயலில் ஏன் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளர்கள்?” என்று கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சந்திராவின் மகன் சரவணன் (22) அங்கு வந்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சந்திராவும், அவரது மகன் சரவணனும் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் அமிர்தம் மற்றும் காசியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமிர்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காசி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அமிர்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சந்திரா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story