பூந்தமல்லி தனி கிளை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டமா? சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு


பூந்தமல்லி தனி கிளை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டமா? சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 7:12 AM IST (Updated: 21 Aug 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி தனி கிளை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்வதாக அவர்கள் வரிசையாக அமர்ந்து இருப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் வெடிகுண்டு வழக்குகள் மற்றும் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே சிறப்பு தனி கிளை சிறை அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது கொரோனா தாக்கம் என்பதால் சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்களில் போலீசாரால் கைது செய்யப்படுபவர்கள் நேரடியாக புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படாமல் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு தனி கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டு 13 நாட்கள் இங்கு தனிமையில் அடைக்கப்பட்டு அதன் பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி தனி கிளை சிறையில் கைதிகள் வரிசையாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. அதில் பூந்தமல்லி தனி கிளை சிறையில் கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுகுறித்து சிறை நிர்வாகத்திடம் விசாரித்தபோது, நேற்று முன்தினம் இரவு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 69 பேரை ஒரே நேரத்தில் பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வந்தனர்.

ஒவ்வொருவருக்கும் அங்க அடையாளங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை, மருத்துவ பரிசோதனை ஆகிய சான்றிதழ்கள் சரிபார்த்து சிறையில் அடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் கைதிகள் அனைவரையும் சிறை வாசல் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.

தற்போது இந்த தனி கிளை சிறையில் 109 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Next Story