ஓட்டல், வர்த்தகம் சூடு பிடிக்காத நிலையில் திருப்பூரில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விற்பனை பாதிப்பு


ஓட்டல், வர்த்தகம் சூடு பிடிக்காத நிலையில் திருப்பூரில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 21 Aug 2020 7:34 AM IST (Updated: 21 Aug 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஓட்டல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்படாத நிலையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

பொதுவாக கியாஸ் சிலிண்டர்கள் வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாடு என இரண்டு வகையாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு பயன்பாட்டிற்கு 14.2 கிலோ எடை அளவும், வர்த்தக பயன்பாட்டிற்கு முறையே 19, 35, 47.5, கிலோ என பலதரப்பட்ட எடை அளவுகளிலும் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக திருப்பூரில் வர்த்தக சிலிண்டர் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய எரிவாயு வினியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவர் சாமிவேலு கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வர்த்தக சிலிண்டர்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. புள்ளி விவரத்தின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 85சதவீதம் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது..

பஸ் போக்குவரத்துக்கு தடை

இதேபோல் மே மாதம் 45 சதவீதமும், ஜூன் மாதம் 27, ஜூலை மாதம் 35, ஆகஸ்டு மாதம் 30 சதவீதமும் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி, ஓட்டல், கேண்டீன், மெஸ், ரெஸ்ட்டாரென்ட் உள்ளிட்டவை முழுவீச்சில் செயல்படவில்லை. இதன் காரணமாக வர்த்தக சிலிண்டர்களின் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பனியன் நிறுவனங்கள் குறைவான தொழிலாளர்களுடன் இயங்குவதாலும், நிறுவனங்களுக்கு போதுமான ஆர்ட்ர் கிடைக்காததாலும் அங்கும் வர்த்தக சிலிண்டர்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சமையல் எரிவாயு வினியோகஸ்தர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டால் இந்த நிலை மாறும் என நம்புகின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேவேளையில் ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாலும், பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் வழங்கப்படுவதாலும் வீட்டு உபயோக சிலிண்டரின் விற்பனை வழக்கத்தை விட 5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story