கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு முதியவர் பலி விழுப்புரத்தில் பேராசிரியர்கள் உள்பட 129 பேருக்கு தொற்று


கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு முதியவர் பலி விழுப்புரத்தில் பேராசிரியர்கள் உள்பட 129 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 22 Aug 2020 10:59 AM IST (Updated: 22 Aug 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பேராசிரியர்கள் உள்பட 129 பேருக்கு தொற்று உறுதியானது.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,642 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 129 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றிவரும் 2 பேராசிரியர்கள், விழுப்புரம் ரெயில்வே ஊழியர், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய ஏட்டு, கஞ்சனூர் போலீஸ்காரர், விழுப்புரம் ரெயில்வே போலீஸ் ஏட்டு, விழுப்புரம் மாவட்ட மத்திய சிறை மற்றும் திருக்கோவிலூர் கிளை சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் 2 பேர், பட்டானூர் ரேஷன் கடை விற்பனையாளர் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,771 ஆக உயர்ந்துள்ளது.

முதியவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 5,180 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 57 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,237 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் 74 வயது முதியவர். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு அவருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Next Story