வேலூரில் ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி


வேலூரில் ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 23 Aug 2020 3:15 AM IST (Updated: 23 Aug 2020 1:13 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஓய்வுப்பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அதேபோன்று தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுப்பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் நேற்று பலனின்றி உயிரிழந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-

வேலூரை அடுத்த சிவநாதபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 76). இவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் 22-ந் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதேபோல் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் சிவநேசன் என்பவரின் மனைவி எழிலரசி (65) கடந்த மாதம் 31-ந் தேதியும், ஆரணிப்பாளையம் வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த சிவா (45) கடந்த 2-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 பேருக்கும் நேற்று இறந்து போனார்கள்.

குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி கள்ளூர் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (51). இவருக்கு கடந்த 8-ந்தேதி உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாதிக்பாஷா நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாதிக்பாஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல குடியாத்தம் டவுன் அம்பாபுரம் ஜி.பி.எம். தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (58), ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த சந்திரசேகர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து குடியாத்தம் தாலுகாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story