விநாயகர் சதுர்த்தி விழா: கோவில், வீடுகளில் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு குமரியில் கொண்டாட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா: கோவில், வீடுகளில் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு குமரியில் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2020 5:57 AM IST (Updated: 23 Aug 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவில்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து மக்கள் வழிபாடு செய்தனர்.

நாகர்கோவில், 

தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா மற்றும் பா.ஜனதா சார்பில் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகள், கோவில்கள், பொது இடங்களில் பெரிய, பெரிய விநாயகர் சிலைகளை சில நாட்கள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

கட்டுப்பாடு

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் நேற்று கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், அபிஷேகங்கள் நடந்தன. பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் கோவில் நிர்வாகங்கள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

படையல்

இந்துக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள சிறிய, சிறிய விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விநாயகருக்கு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் சாற்றியும் அவருக்கு பிடித்தமான அவல், பொரி, மோதகம், கொழுக்கட்டை, பஞ்சாமிர்தம் போன்றவற்றை படையல் செய்தும் வழிபாடு நடத்தினர். சில விநாயகர் கோவில்களில் யாக பூஜைகளும் நடைபெற்றன. பல கோவில்களில் பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் படங்கள் மற்றும் சிலைகளுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.

நாகர்கோவில் நகரில் வடசேரி, கிருஷ்ணன்கோவில், வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், கோட்டார், செட்டிகுளம், ராமன்புதூர், இருளப்பபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் நேற்று காலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது. கோட்டார் செட்டித்தெரு பிள்ளையார் கோவில், நாகர்கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவில், ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில், வெள்ளாடிச்சிவிளை கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சில கோவில்களில் யாக பூஜையும் நடைபெற்றது. இவற்றில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசங்கள் அணிந்தும் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டம் முழுவதும் நேற்று விநாயகர் கோவில்கள் மற்றும் சிறு, சிறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

சிலைகள் பிரதிஷ்டை

இந்து முன்னணி மற்றும் இந்து மகாசபா போன்ற இந்து அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள சிறு, சிறு விநாயகர் சிலைகள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல வீடுகளில் பொதுமக்களே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். ஆங்காங்கே பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள சிறு, சிறு விநாயகர் சிலைகள் தமிழக அரசு மற்றும் ஐகோர்ட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு வைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் போலீசார் நேற்று கண்காணித்தனர்.

கோட்டார்

கோட்டார் செங்குந்தர் முதலியார் சமுதாய ஊர்வகை கோவிலான சென்ற திசை வென்ற விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதேபோல் கிருஷ்ணன்கோவில் இலந்தையடி செங்குந்தர் சமுதாய ஊர்வகை விநாயகர்கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

Next Story