10 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


10 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 Aug 2020 4:43 AM GMT (Updated: 23 Aug 2020 4:43 AM GMT)

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்காரணமாக கடந்த 3 மாதங்களாக இல்லாத அளவுக்கு வைகை அணைக்கு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,567 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 10 நாட்களில் வைகை அணை நீர்மட்டம் 15 அடி உயர்ந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த 12-ந்தேதி வரை 40 அடி வரையே தண்ணீர் இருந்தது. தற்போது நீர்மட்டம் 15 அடி உயர்ந்ததால் அணையில் 55 அடி வரை தண்ணீர் உள்ளது.

தண்ணீர் திறக்க முடிவு

தேனி, மதுரை உள்பட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் வருகிற 28-ந்தேதி முதல் மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகளுக்கு முதல்போக நெல் சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story