விழுப்புரத்தில் புவியியல், சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடம்


விழுப்புரத்தில் புவியியல், சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 23 Aug 2020 5:04 AM GMT (Updated: 23 Aug 2020 5:04 AM GMT)

விழுப்புரத்தில் புவியியல், சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் உள்ள நீச்சல் குளம் அருகில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவிற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமையக இணை இயக்குனர் சுதர்சனம், விழுப்புரம் மண்டல இணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மண்டல இணை இயக்குனர் அதிகாரத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கனிம நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், அரசுக்கு கனிம வருவாய் அதிகரிப்பு செய்ய நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் பொருட்டு ரூ.7 லட்சம் மதிப்பில் வாகனம் மற்றும் மண்டல பறக்கும் படை அலுவலருடன் தொடர்பு கொண்டு கள்ளத்தனமாக கனிமம் வெட்டியெடுப்பதை தடுக்கவும், நிர்வாக பணிக்காகவும் ரூ.35 ஆயிரம் மதிப்பில் வாக்கி- டாக்கியும் மண்டல இணை இயக்குனருக்கு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை மாவட்ட துணை இயக்குனர் லட்சுமிபிரியா, உதவி இயக்குனர்கள் திருவண்ணாமலை பன்னீர்செல்வம், காஞ்சீபுரம் பெருமாள்ராஜா, வேலூர் ரமேஷ்குமார், கடலூர் லலிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாச்சலம், விழுப்புரம் ஆவின் தலைவர் பேட்டை முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, ராஜா, எசாலம் பன்னீர், முகுந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் பிரஸ் குமரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாவட்ட வக்கீல் பிரிவு துணைத்தலைவர் வேலவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story