மராட்டியம் - வெளி மாநிலங்கள் இடையே மக்கள் சென்று வர கட்டுப்பாடுகளை தளர்த்த விரைவில் முடிவு


மராட்டியம் - வெளி மாநிலங்கள் இடையே மக்கள் சென்று வர கட்டுப்பாடுகளை தளர்த்த விரைவில் முடிவு
x
தினத்தந்தி 24 Aug 2020 5:31 AM IST (Updated: 24 Aug 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம்- வெளி மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் மக்கள் சென்று வர தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மும்பை, 

நாடு முழுவதும் தற்போது கொரானா ஊரடங்கின் 3-ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கும் நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றங்களுக்கு கட்டுப்பாடுகள் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கடிதம்

அதாவது மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்று கூறி இருக்கிறது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகள் (இ-பாஸ் நடைமுறை) விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.

கட்டுப்பாடுகள் கூடாது

3-ம் கட்ட தளர்வுகள் அமலில் இருக்கும் நிலையில், இத்தகைய கட்டுப்பாடுகள் சரக்கு போக்குவரத்தில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இதனால் வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்குகின்றன.

மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு உள்ளேயும் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கூடாது என 3-ம் கட்ட தளர்வு வழிகாட்டுதல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது முன் அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் நடைமுறை போன்றவை தேவை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இதை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

மக்கள் சென்று வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் தடையோ அல்லது கட்டுப்பாடோ விதித்தால் அது உள்துறை அமைச்சகம் பிறப்பித்த தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறுவதாகும். எனவே கட்டுப்பாடு தளர்வுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

மராட்டியம் விரைவில் முடிவு

மத்திய அரசின் அறிவுரையை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என மராட்டிய மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “மாநிலத்தின் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு இடையே பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்றுமாறு மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கி உள்ளதை கவனித்து உள்ளோம்.

இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.

தற்போது இ-பாஸ் கட்டாயம்

இதேபோல மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர், தற்போது மராட்டியத்தில் இ-பாஸ் கட்டாயம் என்றும், இதுவரை 7 லட்சத்து 74 ஆயிரத்து 203 இ-பாஸ் வினியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Next Story