ரோடியர் மில் விவகாரத்தில் முதல்-அமைச்சர் பொய் பிரசாரம் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
ரோடியர் மில்லை மூடிய விவகாரத்தில் முதல்-அமைச்சர் பொய் பிரசாரம் செய்வதாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகூர்,
பாகூர் தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கீழ்பரிக்கல்பட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொகுதி பொதுச்செயலாளர் சிவராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், மாநில துணை தலைவர் தங்க.விக்ரமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பொய் பிரசாரம்
ரோடியர் மில்லை கவர்னர் கிரண்பெடி தான் மூடிவிட்டார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பொய் பிரசாரம் செய்துவருகிறார். இது கண்டனத்துக்குரியது. பல ஆண்டுகளாக புதுவையை காங்கிரஸ் கட்சியினர் தான் ஆட்சி செய்து வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள், தாங்கள் செய்வதாக கூறி வருகின்றனர். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் எடுத்துக்கூற வேண்டும்.
பாகூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சி தான் புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது. எனவே வருகிற தேர்தலில் பா.ஜ.க. எந்த கூட்டணியில் இருந்தாலும் பாகூர் தொகுதியில் நமது கட்சி தான் போட்டியிடும். எனவே பாகூர் தொகுதி நிர்வாகிகள் சிறப்பாக செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருபுவனை
திருபுவனை தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் செயற்குழுக்கூட்டம் தொகுதி தலைவர் கராத்தே முருகன் தலைமையில் மதகடிப்பட்டில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் யோக முருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், செயலாளர் நாகராஜ், எஸ்.சி. அணி தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் தனசேகரன், விவசாய அணித்தலைவர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருபுவனை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story