ராய்காட் மாவட்டத்தில் துயர சம்பவம் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 59 பேர் உயிரோடு புதைந்தனர்


ராய்காட் மாவட்டத்தில் துயர சம்பவம் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 59 பேர் உயிரோடு புதைந்தனர்
x
தினத்தந்தி 24 Aug 2020 11:57 PM GMT (Updated: 24 Aug 2020 11:57 PM GMT)

ராய்காட் மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 59 பேர் உயிரோடு புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி விடிய, விடிய நடந்தது.

மும்பை, 

மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது.

40 வீடுகள்

இந்த கட்டிடத்தில் சுமார் 40 வீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 6.50 மணியளவில் கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழ தொடங்கியது. இதனால் காதை பிளக்கும் சத்தம் கேட்கவே, கீழ் தளத்தில் வசித்து வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவர்களில் பலர் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இந்தநிலையில் சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து வெளியேறிய புழுதியால் அந்த பகுதியே புகை மண்டலம் போல ஆனது.

மீட்பு பணி

அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களில் பலர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து உள்ளூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிடஇடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பின்னர் மும்பை, புனேயில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன எந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் மீட்பு பணிக்காக மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. விடிய, விடிய மீட்பு பணி நடந்தது.

59 பேர் சிக்கினர்

இந்த கட்டிடத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பலர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்றும் கூறப்பட்டதால் அவர்கள் உயிர் தப்பினர்.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் 59 பேர் உயிரோடு புதைந்ததாக மந்திரலயா கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய 51 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் தகவல்

இந்த சம்பவம் குறித்து ராய்காட் மாவட்ட கலெக்டர் நித்தி சவுத்ரி கூறுகையில், "திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் கட்டிடம் இடிந்த போது அங்கு வசித்தவர்களில் குறைந்த அளவினர் மட்டுமே வீடுகளில் இருந்து இருப்பார்கள் என நினைக்கிறோம். மேலும் கொரோனா காரணமாக பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அவர்கள் விபத்தில் இருந்து தப்பி விட்டனர்" என்றார்.

மராட்டியத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் இந்த துயர விபத்து ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் விபத்தில் சிக்கிய கட்டிடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் மட்டுமே ஆனதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கட்டிடம் இடிந்து விழுந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் -மந்திரி உத்தரவு

இந்தநிலையில் கட்டிட விபத்து குறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மகாட் கட்டிட விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் நித்தி சவுத்ரி, பாரத் கோகவாலே எம்.எல்.ஏ.விடம் பேசி உள்ளார். துரித மீட்பு பணிகள், நிவாரணப்பணிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்-மந்திரி அவர்களிடம் உறுதி அளித்து உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமித்ஷா அதிர்ச்சி

கட்டிட விபத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று மராட்டிய அரசுக்கு அவர் உறுதி அளித்தார்.

Next Story